சாப்பாட்டுச் சவால் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது சீன இணையப் பிரபலம் உயிரிழப்பு.
சீனாவில் 24 வயது இணையப் பிரபலம் நேரலையில் சாப்பாட்டுச் சவால் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.
அந்தச் சம்பவம் ஜூலை 14ஆம் தேதி நடந்தது.
பத்து மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியாகச் சாப்பிடும் சவால்களைச் செய்வதில் பெயர்பெற்றவர் பான் சியாவ்டிங்.
ஒரு வேளை உணவுக்கு, சியாவ்டிங் 10 கிலோகிராம் எடையுள்ள உணவை உண்டதாக உள்ளூர் சீன இணையவாசல் ஒன்று தெரிவித்தது.
அவரது பெற்றோரும் நலன் விரும்பிகளும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து அந்தச் செயலை மேற்கொண்டார்.
சியாவ்டிங்கின் உடற்கூராய்வு அறிக்கையில், அவரது வயிற்றின் வடிவம் சிதைந்து காணப்பட்டதாகவும், அதில் செரிமானமற்ற உணவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சியாவ்டிங்கின் மரணம் சமூக ஊடகத்தில் சுகாதாரக் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்தகைய சவால்களை மேற்கொள்வதற்கான காரணங்கள் குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“ஒருவர் சாப்பிடுவதை ஏன் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பது இதுவரை என்னால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று,” என இணையவாசி ஒருவர் கூறினார்.