தம்மிக்க நிரோஷனின் கொலையாளிகள் கைது : பெண்ணொருவர் உடந்தை!
19 வயதுக்குட்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த கொலையை இத்தாலி மற்றும் துபாயில் இருவர் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படுகிறது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இத்தாலியில் வசிக்கும் ஒருவரால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக்க நிரோஷனைக் கொல்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்று செயல்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தான் துப்பாக்கியால் சுட்ட பிறகு, மற்றவர் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்ய போலீசார் சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தினர்.
இவரைத் தவிர, தம்மிக்கவின் கொலைக்காக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றச் செயலுக்கு பயன்படுத்திய துப்பாக்கி அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலைக்கு முன்னரும் பின்னரும் கைதான பெண்ணின் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தம்மிக்க நிரோஷன் கடந்த 16ஆம் திகதி இரவு சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது கொலைக்கு இரண்டு பழைய பிரச்சனைகளுக்காக இக் கொலை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மாகாண பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறியின் தலைமையில் காலி குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஜான் ஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் குற்றம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன அல்கிரியகே மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.