பெண் தலையில் 77 ஊசிகளைக் குத்திய சூனியக்காரர்.
ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரரால் ஓர் இளம்பெண்ணின் மண்டை ஓட்டில் குத்தப் பட்டிருந்த 77 ஊசிகளை பல கட்டங்களாக ஆராய்ந்து மருத்துவர்கள் அகற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் இஷிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா பெஹரா, 19. நீண்ட நாள்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தவரை பீமா பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரேஷ்மாவின் தலையை ‘சிடி ஸ்கேன்’ மூலம் ஆராய்ந்ததில் 22 ஊசிகள் இருக்கலாம் என கணித்த மருத்துவர்கள் அதில் 8 ஊசிகளை மட்டுமே எடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, முன்பைக்காட்டிலும் அதிக வலியால் அவதிப்பட்ட ரேஷ்மாவை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது மண்டை ஓட்டிலிருந்து 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை (ஜூலை 20) நரம்பியல் நிபுணர்களால் மீண்டும் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மேலும் 7 ஊசிகள் அகற்றப் பட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசிய அந்த மருத்துவமனையின் இயக்குநர் பாபாகிரஹி ராத், “இதுவரை 77 ஊசிகளை இரு அறுவை சிகிச்சைகள் மூலம் ரேஷ்மாவின் மண்டை ஓட்டிலிருந்து அகற்றியுள்ளோம். அதிர்ஷ்டவசமாக, ஊசிகளால் அவரது மண்டை ஓட்டில் கடும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தலையில் உள்ள மென் திசுக்களில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பெண் இப்போது மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்,” என்றார்.
“அவர் சூனியம் செய்பவரை எந்தப் பிரச்சினைகளுக்காக நாடினார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்று கூறினார்.
இதனிடையே, சூனியம் செய்வதாகக் கூறி ரேஷ்மாவின் தலையில் ஊசிகளைச் செலுத்திய தேஜ்ராஜ் ராணாவை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் இறந்த பிறகு ரேஷ்மா அடிக்கடி நோய்வாய்ப்பட்டுள்ளார். சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காததால் 2021ல் ரேஷ்மாவின் குடும்பத்தினர் சூனியக்காரரான ராணாவின் உதவியை நாடியுள்ளனர்.
சிகிச்சை வழங்குவதாகக் கூறி ரேஷ்மாவை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற ராணா, மண்டை ஓட்டில் ஊசிகளைச் செருகியிருக்கலாம் என ரேஷ்மாவின் குடும்பத்தினர் காவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.