அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவாரா? அரசியல் பார்வை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) அதிபர் தேர்தலில் இருந்து விலகி துணை அதிபர் கமலா ஹாரிஸை (Kamala Harris) ஜனநாயகக் கட்சியின் புதிய அதிபர் வேட்பாளராகப் பரிந்துரைத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் நடைபெறும் ஜனநாயக் கட்சியின் தேசிய மாநாட்டில் யார் அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் என்பது முறையாக அறிவிக்கப்படும்.

மாநாட்டில் திருவாட்டி ஹாரிஸுக்குப் போதிய ஆதரவு கிடைக்குமா?

வேட்பாளரானால் திரு டோனல்ட் டிரம்பைத் தோற்கடிப்பாரா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

அவற்றுக்கு அமெரிக்க அரசியல் கவனிப்பாளர்கள் தந்த சில பதில்கள் ……………………….

(படம்: Kamala Harris/ Facebook)
“முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு” – மோனா செரேன் (Mona Charen)

“அடுத்த மாதம் நடைபெறும் ஜனநாயக் கட்சியின் தேசிய மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1968 மாநாட்டை அது நினைவூட்டும். கட்சியின் ஆற்றலையும் திருவாட்டி ஹாரிஸின் திறமையையும் அது வெளிக்காட்டும். தற்போதைய சூழலைச் சிலர் குழப்பமாகக் கருதலாம். ஆனால் அதனை நியாயமான போட்டியாக அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்”

(படம்: REUTERS/Elijah Nouvelage)
“ஜனநாயகக் கட்சியின் ஆற்றல் வெளிப்படும்” – மைக்கல் ஸ்டார் ஹோப்கின்ஸ் (Michael Starr Hopkins)

“திரு டிரம்ப்புடன் நேருக்கு நேர் மோதும் ஆற்றல் திருவாட்டி ஹாரிஸுக்கு இருக்கிறது. அவரது போராட்டத்தில் தாங்களும் இருப்பதாக இளையர்களும் பெண்களும் உணருகின்றனர். சிறந்த வேட்பாளரைக் கொண்டு அனைத்தையும் அடைய வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக.”
(படம்: AFP/John LAMPARSKI)
“வருவதைத் தடுக்க முடியாது” – ஹேலன் ஆன்ட்ரூஸ் (Helen Andrews)

“திரு டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று நம்புகிறேன். அவர் ஆட்சியில் பொருள்களின் விலை குறையும். போர்கள் தணியும். ஏற்கனவே அவரது ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்துள்ளனர். முதல் பெண் அதிபராகி வரலாற்றுச் சாதனை செய்யத் திருவாட்டி ஹாரிஸ் நிச்சயம் போராடுவார். ஆனால் அந்த முயற்சி நிறைவேறுமா என்பது சந்தேகம்.”

(படம்: AFP)
“குழப்பங்கள் டிரம்ப்புக்குச் சாதகமாகலாம்” – சௌரப் சர்மா (Saurabh Sharma)

“ஜனநாயக் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் டிரம்ப்புக்குச் சாதகமாக அமைந்துள்ளன. அடுத்த சில வாரங்களில் திருவாட்டி ஹாரிஸை எப்படித் திறமையற்றவராகக் காட்டலாம் என்பதில் அவரது பிரசாரம் சூடுபிடிக்கும்.”

படம்: AFP / SAUL LOEB
“டிரம்ப்பின் ‘நினைவுகளை’ ஹாரிஸ் அகற்ற வேண்டும் – லியாம் டோனோவன் (Liam Donovan)

“திரு பைடனைக் காட்டிலும் திரு டிரம்ப்பின் கொள்கைகள் சாதகமாக இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். எனவே திரு டிரம்ப்பின் நினைவுகளை அகற்ற வேண்டிய பெரிய பொறுப்பு திருமதி ஹாரிஸுக்கு உண்டு. தேர்தல் முடிவைக் கணிக்க முடியவில்லை; ஆனால் திரு டிரம்ப்பின் பாதை சுமூகமாக இருப்பதை உணர்கிறேன்”

Leave A Reply

Your email address will not be published.