11 வருடங்கள் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்த முல்லைத்தீவு பெண் ஒருவர் திரும்பி வர முயல்கையில் கைது.
இந்தியாவில் 11 வருடங்களாக வீசா இன்றி இந்தியாவில் தங்கியிருந்த முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை மீன்பிடி படகு மூலம் , இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர முற்பட்ட வேளையில் அவரை , ராமேஸ்வரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு 6 மாத மருத்துவ விசாவில் இந்தியா சென்ற இந்தப் பெண், முல்லைத்தீவு குடும்பம் ஒன்றுடன் தங்கி தையல் வேலை செய்து வந்துள்ளார். மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பியபோது, மீன்பிடி படகுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து, இலங்கைக்கு திரும்ப தயாராகியுள்ளார்.
பயணத்தை தயார் செய்து கடற்கரைக்கு வந்த அவரது நடத்தை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாலும், அவரிடம் விசாரணை நடத்திய போது இலங்கை பெண் என கூறியதாலும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போதே விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.
இரவு 7 மணிக்கு , ஐம்பதாயிரம் ரூபாய் செலுத்தியவர்கள் தன்னை அழைத்துச் செல்ல மீன்பிடி படகை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு வரப்போவதாக அவர் தெரிவித்ததையடுத்து, படகு வரும் வரை மறைந்து காத்திருந்த போலீசார் படகில் இருந்த இரு படகோட்டிகளையும் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு பெண்ணிடம் இருந்து இந்த பயணத்துக்கான பணத்தை எடுத்துச் சென்ற மனித கடத்தல்காரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பெண் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.