மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்த கணவருக்குச் சிறை, 6 பிரம்படி.
சிங்கப்பூரில் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 38 வயது ஆடவருக்கு 8 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 6 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணப் பாலியல் பலாத்காரத்திற்கான விலக்கு முழுமையாக ரத்துசெய்யப்பட்டது.
அதன் பிறகு நீதிமன்றம் சந்திக்கும் அத்தகைய முதல் வழக்கு இது.
மனைவியின் அடையாளத்தைப் பாதுகாக்க ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அந்தப் பெண் இன்னும் சட்டப்படி அந்த ஆடவரின் மனைவியாகவே இருக்கிறார்.
இருவருக்கும் ஒரே வயது. அவர்கள் 2012ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டு ஜூலையில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆடவர் தமது மனைவியை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களின் பிள்ளைகள் இடையூறுகள் தந்தும் ஆடவர் அவ்வாறு செய்தார்.
சம்பவம் நடந்த அடுத்த நாள் மனைவி காவல்துறையிடம் புகாரளித்தார்.
அதற்கு முன்புதான் அவர் தமது வீட்டுக்கு மீண்டும் வந்தார். மனைவிக்கும் அவருக்கும் இடையே சண்டை நீடித்ததால் மனைவியிடம் அவருடன் தங்கும்படி உறவினர்கள் சிலர் வற்புறுத்தினார்.
அதன்பின் ஆடவர் அவரது மாமியாரை அழைத்து மனைவியிடம் புகாரை மீட்டுக்கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார்.
மனைவி அவ்வாறு செய்யவில்லையென்றால் அவர்களது பிள்ளைகள் வளர்ப்புப்பெற்றோர் பராமரிப்பில் இருக்கும் வாய்ப்புள்ளது, அந்த வழக்கு செய்தியில் வரும் வாய்ப்பிருக்கிறது என்று ஆடவர் தமது மாமியாரிடம் கூறினார்.
வழக்கில் தாம் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.