இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் மாண்டனர் : காஸா சுகாதார அமைச்சு அறிவிப்பு

காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் 70 பாலஸ்தீனர்கள் மாண்டதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு ஜூலை 22ஆம் தேதியன்று தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பின் தலைமையில் காஸா சுகாதார அமைச்சு செயல்பட்டு வருகிறது.

தென்காஸாவிலிருந்து வெளியேறுமாறு அங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு இஸ்‌ரேல் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தென்காஸாவில் உள்ள அல் மவாசி வட்டாரத்தில் பாலஸ்தீன அகதிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிருக்குப் பயந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் ஏவுகணைகள் பாய்ச்சப்படுவதைக் கட்டுப்படுத்தப்போவதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் கான் யூனிஸ் பகுதியில் இஸ்‌ரேலிய ராணுவத்துக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.

அல் மவாசி வட்டாரத்தைக் குறிவைத்து இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் 92 பேர் மாண்டதாக காஸா சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்‌ரேல் கூறியது.

காஸாவில் உள்ள சில பகுதிகளில் ஹமாஸ் போராளிகள் இல்லை என்று இஸ்‌ரேல் முன்பு தெரிவித்திருந்தது.

ஆனால் அவ்விடங்களிலும் அது தற்போது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பை வேருடன் அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் நெருக்குதல் அளித்துவரும் நிலையில், பிரதமர் நெட்டன்யாகு ஜூலை 22ஆம் தேதியன்று வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிபர் பைடனுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.