போராட்டம் நடத்திய பெண்களை உயிருடன் புதைக்க மண் கொட்டப்பட்ட சம்பவம் (video)
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சாலையில் போராட்டம் நடத்திய இரு பெண்கள் மீது அவர்கள் மண்ணில் புதையும் அளவுக்கு லாரி மூலம் மண் கொட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே, ஆஷா பாண்டே ஆகிய இரு பெண்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள் சாலை அமைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட மண்ணைச் சுமந்து நின்ற லாரியின் முன் அமர்ந்து அந்த இரு பெண்களும் போராட்டம் நடத்தினர். அவர்கள் எதிர்பாராத வகையில் லாரியில் இருந்த மண் முழுவதும் அந்தப் பெண்கள் மீது கொட்டப்பட்டது.
இதில், அவர்கள் கிட்டத்தட்ட முழுமையாக மண்ணில் புதைந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.