வன்முறையாக மாறி கலவரப் பூமியான பங்ளாதேஷில் திடீர் அமைதி
பங்ளாதேஷில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்த மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறி கலவரப் பூமியானதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் உச்ச நீதிமன்றம், சில அரசாங்க வேலை ஒதுக்கீடுகளை அகற்றியதால் ஜூலை 22ஆம் தேதி எதிர்பாராத அமைதி நிலவியது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 139 பேர் உயிரிழந்தனர். 2018ல் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அரசாங்கம் வேலை ஒதுக்கீடுகளை நீக்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்துவிட்டது.
இதையடுத்து மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம், 93 விழுக்காடு அரசாங்க வேலைகள் திறன்களின் அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு முன்பு 53 விழுக்காடு அரசாங்க வேலைகள் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் வசதி குறைந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஜூலை 22ஆம் தேதி வன்முறையோ, ஆர்ப்பாட்டங்களோ நடக்கவில்லை என்று பங்ளாதேஷ் ஊடகங்கள் தெரிவித்தன.
அன்று பிற்பகல் மூன்று மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முந்தைய நாள்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க இரண்டு மணி நேரம் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இருந்தாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவ போராட்டத் தலைவர்களை விடுவிக்கும் வரை போராட்டங்களைத் தொடரும் திட்டம் இருப்பதாக மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 17ஆம் தேதியிலிருந்து மூடப்பட்ட பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறப்பதற்கு ஊரடங்கை விலக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் வன்முறை தொடர்பில் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை திங்கட்கிழமை ( ஜூலை 22) தெரிவித்தது.
மற்றொரு நிலவரத்தில் பங்ளாதேஷில் நடைபெறும் மாணவர் போராட்டங்களால் கவலை அடைந்துள்ள மலேசியா, அந்நாட்டில் உள்ள அனைத்து மலேசிய மாணவர்களையும் தாயகம் அழைத்து வர முடிவு செய்துள்ளது.
பங்ளாதேஷில் தற்போதுள்ள போராட்டங்களை சுட்டிக்காட்டிய மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.