ஆம்ஸ்ட்ராங் மறைவைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆனந்தன்
ஆம்ஸ்ட்ராங் மறைவைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பி.ஆனந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கும் இவர், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங்குடன் 2006 முதல் இணைந்து பணியாற்றியவர். அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் முன்னிலையாகி அவரை விடுவித்தவர்.
ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் தங்கி படிக்க இலவசமாக இடமும் உணவும் வழங்கி வருகிறார். இவரது சமூக சேவையைப் பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று சட்ட விளக்கம் அளிப்பவராக இருந்து வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு 41,000 ஓட்டுகளுக்கு மேல் வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.