முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்

முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்கும் அளவுக்கு முறைகேடு நடந்ததாக ஆதாரம் இல்லை என்பதால் மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை 23 லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து, ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் வெளியான போது கருணை மதிப்பெண் உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தன. வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமான நிலையில், முறைகேடுகள் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

இதை விரிவாக விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, சிபிஐ-யின் விசாரணை அறிக்கையின் படி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மற்றும் பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்ததாகவும், விசாரணை நடத்திய வரை 155 மாணவர்கள் வினாத்தாள் கசிவால் பலனடைந்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை ஐஐடி வழங்கிய அறிக்கை மற்றும் தேசிய தேர்வு முகமை வழங்கிய மையங்கள் வாரியான தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டனர். மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதிக்கும் என கூறிய நீதிபதிகள், தேர்வை ரத்து செய்தால், வரும் கல்வி ஆண்டு சீர்குலையும் எனவும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினர்.

மேலும், ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்கும் அளவுக்கு முறைகேடு நடந்ததாக ஆதாரம் இல்லை என்பதால்,
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய 19-ஆவது கேள்விக்கு, நிபுணர் குழு அளித்த அறிக்கையின் படி, நான்காவது விடை தான் சரியானது என உத்தரவிட்டனர். இதனால், கருணை மதிப்பெண் பெற்ற 4 லட்சம் மாணவர்கள் தலா 5 மதிப்பெண் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கருதும் மாணவர்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களை நாடலாம் எனவும், தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் விவகாரத்தில் உண்மை வென்று விட்டதாக தெரிவித்தார். முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் எனவும், விரைவில் தேசிய தேர்வு முகமை முழுமையாக மாற்றி அமைக்கப்படும் எனவும் கூறினார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சில மாநில அரசுகள் நடந்து கொள்வதாக குறிப்பிட்ட தர்மேந்திர பிரதான், நீட் விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்து மாணவர்களை திசை திருப்பும் செயலில் சில மாநிலங்கள் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.