திருப்பதி கோயிலில் ஆடை கட்டுப்பாடு..தேவஸ்தானம் முக்கிய உத்தரவு!
திருப்பதி கோயிலில் ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அதன்படி, கடந்த வாரம் இறுதியில் மட்டும் ஒரே நாளில் 65 ஆயிரத்து 134 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்தவார வெள்ளிக்கிழமை மட்டும் உண்டியல் வருமானம் ரூ.4.27 கோடி கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவாரி கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இனி எந்தவொரு பணியாளரும் மற்றொரு ஊழியர் அல்லது பக்தரிடம் பேசுவதற்கு முன், “கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாய” என்று சொன்ன பின்னரே தங்கள் உரையாடலைத் தொடங்க வேண்டும்.
திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேஷ்டி அல்லது பேன்ட், வெள்ளை சட்டை மற்றும் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதி அணிந்து பணிக்கு வரவேண்டும்.
பெண் ஊழியர்கள் வெள்ளை சுடிதார், வெள்ளை சேலை, நெற்றியில் குங்குமம் விபூதி ஆகியவற்றை பூசி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.