மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்!

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2024 – 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து முடித்தார். அந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டி எழுந்துள்ளது.

குறிப்பாக பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இதையடுத்து, இந்த மத்திய பட்ஜெட்டை எதிர்த்து இன்று காலையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ்,

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இந்தியா கூட்டணி எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மத்திய பட்ஜெட்டை கண்டித்து பாதாகைகளை ஏந்தியபடி, முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தமிழக எம்பிக்கள், ‘கிடைக்கவில்லை கிடைக்கவில்லை வெள்ள நிவாரம் கிடைக்கவில்லை’, ‘பட்ஜெட்டில் தமிழ்நாடும் இல்லை; திருக்குறளும் இல்லை’, ‘வீழட்டும் பாசிசம் வெல்லட்டும் ஜனநாயகம்’, ‘தேர்தலுக்கு 10 முறை நிதிநிலை அறிக்கையில் 0 முறை’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.