கம்பஹாவில் ஊரடங்கு : பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமூகத் தொற்று
பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ்
– கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு
கம்பஹா, திவுலப்பிட்டியப் பகுதியில் பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொடைப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த 39 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த பெண், சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்புகையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மூலமே கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் 15 பேர், அவர் தொழில் புரிந்த இடத்திலுள்ள 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை அனைவரும் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்” என்று சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவங்கொடை பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும்வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்குச் செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டியப் பகுதியில் பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையிலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.