நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி தேர்தலைப் பிற்போடவே முடியாது! – யாழில் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு.

“பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம் .ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (24) யாழ். வர்த்தக சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்திலே இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பல நாட்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.

இந்த வழக்கைக் கொண்டு செல்வதற்கு அனுமதியை வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியில் இருந்து இடைநிறுத்தி உத்தரவு வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினாலே நியமனம் பெற்ற பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சட்டபூர்வமானதாக இல்லை என்ற காரணத்தினாலே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வந்த பிறகு அமைச்சரவையை அவசர அவசரமாகக் கூட்டிக் கலந்துரையாடுகின்றார்கள் என்ற செய்தி எங்களுக்குக் கிட்டியிருக்கின்றது. அந்தக் கலந்துரையாடலில் ஒரு நிரந்தர பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்த முடியாது என்ற கருத்து நிலவுவதாக நாம் அறிகின்றோம்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குச் சட்டத்திலே எந்தவிதத் தடையும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றேன். எங்களுடைய அரசமைப்பிலே எப்போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது மிக மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

அதாவது செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிக்கும் இடையிலே ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கையிலேதான் கொடுக்கப்பட்டுள்ளது .

ஆனாலும், ஜனாதிபதியின் கையிலே அது கிடையாது. ஆகவே, தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் எந்தவித நொண்டிச்சாட்டுக்களையும் சொல்லாமல் உடனடியாகத் தேர்தல் தினத்தை அறிவித்து சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்,

Leave A Reply

Your email address will not be published.