விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில்; 10 லட்சம் பேரைத் திரட்டத் திட்டம்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடத்த இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மாநாடு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

அந்த இடத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்திருப்பதாகவும் மாநாட்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏறக்குறைய 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க திட்டமிட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால், மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான தருவிப்பு ஆணை (ஆர்டர்) இப்போதே கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பரில் வெளியீடு கண்ட பிறகு மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து உறுப்பினர்கள் சேர்ப்பு, கட்சி நிர்வாகிகள் நியமனம் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

பதவிகளைப் பெறுவதற்கான முனைப்போடு, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் மக்கள் பணிகள், நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

மக்களை அடிக்கடி சந்திக்கும் வகையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு போன்ற பொதுநிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் பிரபலப்படுத்த மாநாடுகளும் நடத்தப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன..

தொகுதிகளில் நடைப்பயணங்களை மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.