’20’ இற்கு சு.க. ஆதரவு! – எதிரணி உறுப்பினர்கள் ஐவரை வளைத்துப்போட பஸில் களத்தில்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசுக்கு உறுதியளித்துள்ளது.
20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் குழு ஒன்றை அமைத்திருந்தது.
அந்தக் குழுவானது 20 இற்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளது என்றும், அதனடிப்படையில் கட்சியின் தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியனவும் 20ஆவது திருத்தத்தை ஆதரிக்கும் முடிவை ஆளுங்கட்சிக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
இதனிடையே எதிரணி உறுப்பினர்கள் ஐவர் அரசுடன் இணைவது உறுதி என சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களை வளைத்துப் போடும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச களமிறங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
………….