விஜயதாஸவும் பொன்சேகாவும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் – இருவரும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தைப் பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே. உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அம்மாற்றத்தை உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும்.” – என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பியும் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

76 வருடங்களாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்றன என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை முன்னேற்றுவதற்கு தம்முடன் இணைந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.