சம்பளப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஊர்வசி.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள படம் ‘அந்தகன்’.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி திரை காண உள்ளது. பாடல் வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் வெளியிட்டுள்ள ‘அந்தகன் ஆன்த்தம்’ பாடல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் மறுபதிப்பான இதில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விழா மேடையில் பேசிய நடிகர் பிரசாந்த், “அந்தகன் ஆன்த்தம்’ பாடலை வெளியிட வேண்டும் என்று விஜய்யிடம் கேட்டேன். உடனே வெளியிடுகிறேன் என்றார். பாடலைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார். அவர் எனது சகோதரர் போன்றவர். அவருக்கு நன்றி.
“இந்தப் பாடலை இயக்கிக் கொடுத்த நடன இயக்குநர்கள் பிரபுதேவா, சாண்டி ஆகியோருக்கு நன்றி. பாடலைப் பாடிய அனிருத், விஜய் சேதுபதிக்கும் நன்றி.
“நான் ஒருமுறைதான் அழைத்துப் பேசினேன். கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு என எல்லோரும் வந்துவிட்டனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று நெகிச்சியாகப் பேசியிருக்கிறார் பிரசாந்த்.
“நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “பிரசாந்திற்கு கிடைத்தது போல் எனக்கும் ஒரு அப்பா கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” எனக் கூறினார். மேலும் தான் ‘டப்பிங்’ பேச வந்தபோது தனக்கு பேசிய தொகையைவிடவும் இரண்டு மடங்கு தொகையை தியாகராஜன் கொடுத்ததாகக் கூறினார்.
அதேபோல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கொச்சினில் இருந்து விமானத்தில் வந்திருந்த நடிகை ஊர்வசி, கையில் ஒரு பெரிய கவரைக் கொண்டு வந்திருந்தார். அதனை என்னிடம் கொடுத்து, “இந்தப் படத்தில் நடித்ததற்காக எனக்கு நீங்கள் ரொம்பவே அதிக சம்பளம் கொடுத்து விட்டீர்கள். எனவே தயவுசெய்து இந்தப் பணத்தை நீங்கள் திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும்,” என்றார். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகையா என வியக்கவைத்துவிட்டார்,” என தியாகராஜன் பகிர்ந்துகொண்டார்.