கடற்படை வீரர் கொலையில் 6 முன்னாள் மாணவர்களுக்கு மரண தண்டனை.
மலேசியாவில் ‘யுனிவர்சிட்டி பெர்டாஹனான் நேஷனல் மலேசியா’ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு முன்னாள் மாணவர்களுக்கு 21 வயது கடற்படை பயிற்சி வீரரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறுவரும் 21 வயது ஸுல்ஃபர்ஹான் ஒஸ்மான் ஸுல்கர்னைன் என்ற பயிற்சி கடற்படை வீரரை ஏழு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த மேல்முறையீட்டு வழக்கில் மலேசியாவின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில், மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் அளித்த 18 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து, அதற்கு பதிலாக மரண தண்டனையை விதித்தது.
முகம்மது அக்மல், முகம்மது அஸாமுதின், முகம்மது நஜிப், முகம்மது அஃபிஃப், முகம்மது ஷோபிரின் மற்றும் முகம்மது ஹக்கீம் ஆகிய 28 வயதுடைய அறுவருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை ஏற்ற ஹடாரியா சையது இஸ்மாயில் என்ற நீதிபதி தமது தீர்ப்பில், “இந்தக் கொலை கொடுமையிலும் மிகவும் கொடுமையானது. இதுபோன்ற செயல்கள் சமுதாயத்துக்கு கடும் ஆபத்தாக உள்ளது. இதுபோன்ற ஈவிரக்கமற்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று கூறினார்.
இது பற்றிக் கூறும் மலாய் மெயில் செய்தித்தாள், குற்றவாளிகளுக்கு மலேசிய உயர் நீதிமன்றம் விதித்த 18 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்ததாக தெரிவித்தது. அதில் அந்த அறுவருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்ததாகத் தெரிவித்தது.
இறந்தவர் உடலில் அந்த அறுவரும் இறந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 90 தீக்காயங்கள் ஏற்பட வைத்து கொடுமைப்படுத்தியதாகக் நீதிமன்றம் அறிந்தது.