“மௌனமாக இருக்கமாட்டேன்!” – காஸா போரை நிறுத்த வலியுறுத்தும் அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ்.
காஸா போரைக் குறித்து மெளனமாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) கூறியிருக்கிறார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவைச் (Benjamin Netanyahu) சந்தித்தபின் அவர் தொலைக்காட்சி அறிக்கையை வெளியிட்டார்.
திருவாட்டி ஹாரிஸ், காஸா விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனைவிடக் கடுமையாகத் தமது கருத்தை முன்வைத்தார்.
இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் சொன்னார்.
வரும் நவம்பர் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் திருவாட்டி ஹாரிஸ், 9 மாதமாகக் காஸாவைப் பீடித்திருக்கும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆணித்தரமான குரலில் பேசினார்.
ஒருபுறம் மக்கள் பரிதவிக்க, மரத்துப் போனது போன்று இருக்க முடியாது என்றார் அவர்.
திருவாட்டி கமலா ஹாரிஸ் மெளனமாக இருக்கப் போவதில்லை என்று எச்சரித்தார்.