இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் !
ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருப்பூர், கே.பி.சி. நகரைச் சேர்ந்தவர் எஸ்.சேமலையப்பன் (49). இவர் தனியார்மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பள்ளி முடிந்து குழந்தைகளை வேனில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.
வலியால் துடித்த அவர் வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே வேனின் ஸ்டீயரிங்கில் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார். உடனே இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.