ஒலிம்பிக் தொடங்கும் வேளையில் பிரான்ஸ் ரயில் பாதைகளைக் குறிவைத்து தாக்குதல்.
பிரான்சின் அதிவிரைவு ரயில் சேவையைக் குறிவைத்து நாசக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனால், அந்நாட்டின் பரபரப்பான சில ரயில் பாதைகளில் இடையூறு ஏற்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடந்தது. அதற்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
பாரிஸ் நகரத்தை லியல், போர்டோக்ஸ், ஸ்ட்ராஸ்பர்க் போன்ற நகரங்களுடன் இணைக்கும் பாதையில் இருக்கும் கருவிகள் மீது நாசக்காரர்கள் தீ வைத்ததாக அந்நாட்டு ரயில்வே துறை தெரிவித்தது.
மேலும், “அனைத்துப் பயணிகளும் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு அது வலியுறுத்தியுள்ளது. பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், வார இறுதி வரை போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்படும். ரயில்கள் புறப்படும் இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன,” என்றும் அது கூறியது.
“வியாழக்கிழமை இரவு, பிரான்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில் நிறுவனத்தின் அட்லாண்டிக், வடக்கு, கிழக்கு போன்ற அதிவிரைவு ரயில் பாதைகள் மீது நாசக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அங்கிருக்கும் கருவிகளைச் சேதப்படுத்துவதற்காக வேண்டுமென்றே அவர்கள் தீ மூட்டினர்,” என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ரயில் சேவையின் மீது நாசக்காரர்கள் நடத்திய இந்த ஒருங்கிணைந்த தாக்குதலால் பாரிஸ் நகரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழாவிற்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளைத் திறம்பட நடத்த வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் செய்துள்ளது. 45,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 10,000 ராணுவ வீரர்கள், 2,000 தனியார் பாதுகாப்பு முகவர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆளில்லா வானூர்திகளும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த நாச வேலைக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
“இது ஒரு குற்றச்செயல்” என அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் தெரிவித்தார். பாரிஸ் நகரில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி இருப்பதாக அந்நகரக் காவல்துறை தலைவர் கூறினார்.