ரணிலின் வெற்றி உறுதி! – அடித்துக் கூறுகின்றார் ரவி.

“ரணிலால் மாத்திரம்தான் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்று அவர் குறுகிய காலத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார். எனவே, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி நிச்சயம்.”

இவ்வாறு ஐக்கியக் தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாராலும் ஏற்க முடியாத சவாலை ஏற்று செய்து காட்டியவர் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அப்படிப்பட்டவர் தேர்தலில் போட்டியிடுவாரா, தேர்தலை நடத்துவாரா என்று சிலர் கேட்டார்கள். இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டவுடனேயே அவர் முதலாவது வேட்பாளராகக் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார். சுயாதீன வேட்பாளராக – பொது வேட்பாளராகவே அவர் போட்டியிடுகின்றார்.

திட்டமிட்ட திகதியில் அதாவது செப்டெம்பர் 21ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். சுதந்திரமான – நீதியான தேர்தலை நடத்துவதே ஜனாதிபதி ரணிலின் பிரதான நோக்கம்.

அவரால் மாத்திரம்தான் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்று அவர் குறுகிய காலத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்று மிகுதிப் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார். இந்தப் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்தான் சரியானவர் என்று இப்போது எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ரணிலுக்கு வாக்களிக்காதவர்கள் இந்தத் தேர்தலில் அவரை ஆதரிப்பதற்காகச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவே, இந்தத் தேர்தலில் ரணிலின் வெற்றி நிச்சயம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.