‘பதக்கம் வெல்ல உதவியது பகவத் கீதை’.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வெல்ல உதவியது பகவத் கீதை என துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், 22, தெரிவித்துள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றுத் தந்ததோடு, ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம் கிடைத்துள்ளது. இதனால், மனு பாக்கரின் வெண்கலப் பதக்கம் மிகச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் விஜய்குமார் வெள்ளிப் பதக்கமும் ககன் நாரங் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.

இதனிடையே, இந்தியாவின் முதல் பதக்கம் வெல்ல பகவத் கீதை தனக்கு உதவிக்கரமாக இருந்ததாக மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

பதக்கம் வென்ற பிறகு பேசிய இவர், “இது இந்தியாவுக்கு நீண்டகாலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம். அதைப் பெற்றுத்தர மட்டுமே உழைத்தேன். அதிக பதக்கங்கள் பெறுவதற்கான தகுதி உடையது இந்தியா.

“இம்முறை அதிக பதக்கங்களை வெல்வோம் என எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் இதனைக் கனவு போன்று உணர்கிறேன். கடின முயற்சிகளை மேற்கொண்டேன். கடைசி ஆட்டம் வரையும் கூட என்னிடமிருந்த எல்லா ஆற்றலையும் வெளிப்படுத்தினேன். அது வெண்கலமாக மாறியுள்ளது. அடுத்தமுறை என் உழைப்பை மேலும் மதிப்புடையதாக்குவேன்,” எனக் கூறினார்.

கடைசி நிமிடங்களில் இருந்த மனநிலை குறித்து கேட்டதற்கு, ‘‘உண்மையில், பகவத் கீதை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். என்ன செய்ய வேண்டுமோ அதை செய். முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். விதியைக் கட்டுப்படுத்த முடியாது.

“கர்ம வினைகளில் கவனம் செலுத்து. அதன் பலனைப் பற்றி கவலைகொள்ளாதே என்று கீதையில் அர்ஜூனனிடம் கிருஷ்ணர் கூறுவார். இதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது,” என மனு பாக்கர் கூறினார்.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தைத் தவறவிட்டது மிகுந்த வருத்தம் அளித்ததாகச் சொன்ன இவர், “அதிலிருந்து விடுபட நீண்டநாள் எடுத்துக்கொண்டேன். கடந்த காலம் கடந்து சென்றதாகவே இருக்கட்டும். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். பதக்கம் எப்போதுமே குழுவின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான். அதைப் பெற்றுக்கொண்டவராக நான் இருந்ததில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.