என்னை அவமானப்படுத்தாத ஆளே இல்லை: தனுஷ்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களை தனுஷ் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ராயன் ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு தனது அற்புதமான நடிப்பின் மூலம் இதயங்களை வென்றவர் தனுஷ்.
நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் சமூக தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
“திரையுலகிற்கு நான் முதன்முதலில் வந்தபோது உருவ கேலி செய்யப்பட்டேன்,” என அவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, அனிருத் சதீஷ் ஆகியோருடன் நடந்த ஓர் உரையாடலின் போது, தனுஷ் தனது தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டது குறித்தும் தெரிவித்தார்.
மேலும், ‘’காதல் கொண்டேன்’ படப்பிடிப்பின்போது ஹீரோ யார் என்று என்னிடம் கேட்டனர். எந்த அவமானத்தையும் சந்திக்கத் தயாராக இல்லை என்பதால் வேறு ஒருவரைச் சுட்டிக்காட்டினேன். ஆனால், பிறகு நான்தான் கதாநாயகன் எனத் தெரிந்ததும் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர்.
“இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். பின்னர் காருக்குள் இதை நினைத்து மணிக்கணக்கில் அழுதேன். என்னை கேலி செய்யாத, அவமானப்படுத்தாத ஆளே இல்லை” என்றார் தனுஷ்.