முல்லைத்தீவு பரிசோதனை வெற்றி… வடக்கு முழுவதும் கொக்கோ தோட்டம்… சாக்லேட் தயாரிப்புக்கும் தயார்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சார்த்த திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட கொக்கோ மாதிரி பண்ணையின் இரண்டாம் பயிரின் அறுவடை வெற்றியீட்டியதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் , மாவட்டம் முழுவதும் கொக்கோ செய்கையை விரிவுபடுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய மாகாணத்தில் மாத்திரம் கொக்கோ பயிர்ச்செய்கை மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கொக்கோவில் தேவையான அளவு புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய நிலையம் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோவில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு அங்கு மிக இலகுவாக சொக்லேட் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டது.

இதனால் வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் கொக்கோ பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து முழு வடமாகாணத்திலும் கொக்கோ பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விவசாய திணைக்களம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையும் கொக்கோ கொட்டையின் எடை மற்றும் ஒரு கொட்டையில் அடங்கியுள்ள கொக்கோ பீன்ஸ் அளவு மத்திய மாகாணத்தில் உள்ள கொக்கோவை விட சற்றும் குறைவாக இல்லை என்பதும் சிறப்பு.

முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மத்திய மாகாண விவசாய திணைக்களத்துடன் கலந்தாலோசித்து முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமாகாணத்திற்கு ஏற்ற வகையிலான கொக்கோ வகைகளை கொண்டுவந்து, அந்த ரகத்தை பரப்பவும் எதிர்பார்க்கிறது.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய முகாமையாளர் துமிலன் மற்றும் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாமினி சசீலன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒட்டுசுட்டான் விவசாய ஆசிரியை அனோதினி சிவனேஸ்வரன் அவர்களினால் இந்த கொக்கோ செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சொக்லேட் உற்பத்தியை செய்வதிலும் அவர் முன்னிலையாக செயல்பட்டு வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.