டெல்லியில் மழைநீரில் சிக்கி 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பலி

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் மழைநீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

தலைநகர் டெல்லியில் தொடர் கனமழையால் பழைய ராஜேந்திர நகரில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக பயிற்சி மையத்தின் தரைத்தளத்திற்கு கீழ் பகுதியில் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.

இதனால் தரையின் கீழ் தளத்திற்குள் படித்துக் கொண்டிருந்த மாணவர்களால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 மாணவிகள் உட்பட 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தநிலையில், மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையத்தின் முன்பாக குவிந்து மாணவ -மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களுக்கு முன் இதே பயிற்சி மையத்தில் மழை காரணமாக மின்சாரம் பாய்ந்து ஒரு மாணவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தின் பொறுப்பற்ற செயலால், ஒரு சாதாரண குடிமகன் பாதுகாப்பற்ற கட்டிடத்திற்காக பணம் செலுத்தி, உயிரை இழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் சவுகரியம் ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றும், இதனை கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கரோல் பாக் பகுதியில் மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதேபோல டெல்லி மேயர் ஷெல்லி ஓபராயின் வீட்டை முற்றுகையிட்டு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.