லெபனானில் பதிலடியைத் தொடங்கியது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா இயக்கம் எதிர்பார்த்ததுபோலவே தென் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் ஆளில்லா விமானம் திங்கட்கிழமை (ஜூலை 29) நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒரு கைக்குழந்தையும் அடங்கும் என்று லெபனான் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் தொடங்கி இருக்கும் பதிலடி இது என்று கூறப்படுகிறது. ஞாயிறு பின்னேரத்தில் கூடிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ராக்கெட் தாக்குதலுக்கு எந்த வகையில், எப்போது பதிலடி தரலாம் என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கு வழங்கியது.

முன்னதாக, பதிலடி தர இருப்பதாக இஸ்ரேல் மிரட்டியதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா போராளிக் குழு லெபனானின் தெற்கு, கிழக்கு வட்டாரங்களில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தகவல் கசிந்தது. இதனை அந்தக் குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று கோலான் ஹைட்ஸ் வட்டாரத்தில் உள்ள மஜ்டால் ஷாம்ஸ் நகரைத் தாக்கியதில் 12 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அந்தப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் சிறுவர்களின் மரணத்தை அறிந்து இஸ்ரேல் சினம் கொண்டது.

“எதிரிகளைக் கடுமையாகத் தாக்குவோம்,” என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் யோவாவ் காலன்ட், தாக்குதல் நடைபெற்றதற்கு மறுநாள் சூளுரைத்தார்.

அவரது எச்சரிக்கை, காஸா போரை மேலும் தீவிரமாக்கக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்து உள்ளது.

ஃபாலாக்-1 என்னும் ஈரானிய ராக்கெட்டை தமது எல்லைக்குள் வீசி லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

ஆனால், அந்தத் தாக்குதலுக்கும் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈரானின் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லா தெரிவித்தது.

ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறி வைப்பதே வழக்கம்.

இந்நிலையில், லெபனானின் தெற்கு வட்டாரத்தில் இருந்தும், இஸ்ரேல் குறி வைத்துத் தாக்கக்கூடும் என்று கருதக்கூடிய பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் ஹிஸ்புல்லா படையினரில் சிலர் வெளியேறி இருப்பதாக அந்தப் படைக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியது.

ஹிஸ்புல்லா இயக்கம் கிழக்கு லெபனானில், சிரியா எல்லையில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும் தெற்கு லெபனானிலும் வலுவானை நிலையைக் கொண்டு உள்ளது.

குறிப்பாக, தென் லெபனானில் இருந்துதான் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேலியப் படையினர் மீது ஹிஸ்புல்லா தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

தமது நட்பு போராளி இயக்கமான ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை அது தொடர்ந்து நடத்தி வருகிறது.

பெய்ரூட் விமானங்கள் ரத்து
ஹிஸ்புல்லா குழுவினருக்கு இஸ்ரேல் பதிடி தரக்கூடும் என்ற அச்சம் பரவுவதன் எதிரொலியாக பெய்ரூட் விமான நிலையம் சில விமானச் சேவைகளை ரத்து செய்து உள்ளது.

தமது விமானச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டு இருப்பதாக லெபனான் விமான நிறுவனமான மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் கூறியது.லுஃப்தான்சாவின் யூரோவிங்ஸ் விமான நிறுவனமும் பெய்ரூட்டுக்கான மூன்று விமானங்களை திங்கட்கிழமை (ஜூலை 29) பிற்பகலில் ரத்து செய்தது.

டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஞாயிறு இரவு இரு விமானச் சேவைகளை ரத்து செய்தது.
பெய்ரூட் செல்ல வேண்டிய மேலும் சில மலிவுக் கட்டண விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக அந்தந்த விமான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.