கைது செய்யப்படுவதற்கு முன்னர் நீதிமன்றில் ஆஜரான ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமானமற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் இன்று (29) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முறைப்பாட்டுடன் முன்னிலையாகியுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

அமைச்சர் ஜீவன் தொண்டமான் அக்கட்சியின் ஆதரவாளர்கள் குழுவுடன் கடந்த மே மாதம் (30) நுவரெலியா பித்ரு தோட்டத்திற்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலைக்கு சென்று எஸ்டேட் நிறுவனத்தின் ஊழியர்களையும் , பிரதம நிறைவேற்று அதிகாரியையும் தடுத்து வைத்ததாக நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த மாதம் 22ஆம் திகதி நுவரெலியா நீதவான், நுவரெலியா பொலிஸார், முறைப்பாடு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும், விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால் சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றில் முன்வைக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தோட்ட நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் பெயர்களை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், அதன்படி சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றம் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.சத்தியவேல், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லோகதாஸ், நுவரெலியா பிராந்திய சபையின் முன்னாள் தலைவர் யோகநாதன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால், அடுத்த மாதம் 26 திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்காந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

எதிர்வரும் விசாரணைகள் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.