மன்னார் வைத்தியசாலை வைத்தியர்களின் தவறினால் உயிரிழந்ததாக கூறப்படும் இளம் தாய் மரணம் தொடர்பில் விசேட விசாரணை!
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களின் அலட்சியத்தால் 27 வயதுடைய இளம் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிரிழந்த யுவதியின் தாய் சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் தம்பனைக்குளம் பகுதியில் வசித்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாவார்.
பிரசவத்திற்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய், பிரசவத்திற்குப் பின் ஏற்பட்ட இரத்தக் கசிவையும் பொருட்படுத்தாமல் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மறுநாள் முதல் அவருக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது, முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அம்புலன்ஸ் மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரத்தப்போக்கு சாதாரண நிலை என வைத்தியர்கள் கருதியதாகவும், அப்படி சொல்லி தனது மகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனவும் உயிரிழந்த யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இறுதியாக, அதிக இரத்தப்போக்கு காரணமாக தனது மகள் மயங்கி விழுந்ததாகவும், அதன் பின்னர் வைத்தியர்கள் பரிசோதித்து சிகிச்சை முறைகளை ஆரம்பித்ததாகவும் கூறிய யுவதியின் தாய், சிறிது நேரத்திலேயே தனது மகள் உயிரிழந்துவிட்டதாக கதறி அழுதார்.
சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசாத் எம்.ஹனீபாவிடம் கேட்ட போது, உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அதிக இரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சி காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக முதன்மையாக தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
அவரது உடலின் பல உறுப்புகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணைகளின் பின்னரே இந்த இளம் தாயின் மரணத்திற்கான காரணத்தை உறுதியாக முடிவெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.