ஜனாதிபதியுடன் இணைவதாக 92 மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் இன்று (30) ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பிரேரணை சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவினால் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அந்த யோசனையை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுவில் வேட்பாளரை முன்வைப்பதற்கு ஆதரவாக வாக்களித்த எம்பிக்கள் இந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காததுடன், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்த குழு கூட்டத்தில் வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் கலந்து கொண்டார்.