‘ஆகஸ்ட் 16 முதல் புதுப் படங்களைத் தொடங்கக்கூடாது’.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானபின் எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும்.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏற்கெனவே முன்பணம் பெற்றுக்கொண்ட படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, அடுத்த படத்துக்குச் செல்லவேண்டும்.
தயாரிப்பாளர்கள் பலரிடமும் நடிகர் தனுஷ் முன்பணம் பெற்றிருப்பதால், வருங்காலத்தில் தனுஷ் தனது புதிய படங்களின் பணிகளைத் துவங்கும் முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
பல படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்பதை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது.
அதனால் ஆகஸ்ட் 16 முதல் புதிய படங்கள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். தற்போது நடக்கும் படப்பிடிப்புகளை அக்டோபர் 30க்குள் முடிக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு கார்த்தி கண்டனம்
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.
நடிகர்கள் பிரச்சினை, தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சினை குறித்து இருதரப்பினரும் கலந்து பேசி, முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், தயாரிப்பாளர் சங்கம் எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தனுஷ் விஷயத்தில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
படப்பிடிப்பை நிறுத்தப்போவதாக அவர்கள் கூறியிருப்பது என்பது பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய விஷயம். அதை எப்படி அவர்களே முடிவெடுக்க முடியும் என்று தெரியவில்லை என கார்த்தி தெரிவித்துள்ளார்.