‘பணம் சம்பாதிக்க எனக்கு வேலை தேவை’
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்று இந்தியத் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு நிரந்தர வேலையைப் பெறுவதில் தமக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து மனுவின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்பால் ராணா அண்மையில் பகிர்ந்தார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியத் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பெற்ற பிறகு, ராணா கூறிய ஆச்சரியத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
RevSportz எனும் ஊடகத்துக்கு ராணா உணர்ச்சிபூர்வமாக அளித்துள்ள பேட்டியில், தோக்கியோ விளையாட்டுகளிலிருந்து மனு எதிர்பாராத விதமாக வெளியேறியதைத் தொடர்ந்து தமக்கு ஏற்பட்ட சிரமங்களைப் பகிர்ந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் எதிர்கொண்ட விமர்சனங்களையும் நிதிச் சிக்கலையும் பற்றி ராணா பேசினார்.
“என்னை விமர்சித்த அனைவரும், தோக்கியோவுக்குப் பிறகு என்னை வில்லனாக்கினர். நான் இல்லாத நேரத்தில், இப்போது என்னிடமிருந்து நேர்காணல்களை எதிர்பார்க்கிறார்கள். பரவாயில்லை, நான் பேட்டியளித்தேன். ஆனால் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட இழப்பை இவர்கள் ஈடுசெய்வார்களா?” என ராணா வினவினார்.
மனுவின் ஒலிம்பிக் வெற்றி குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்தாலும், இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கம் மற்றும் பிற விளையாட்டு அமைப்புகளிடமிருந்து போதிய நிதியுதவி இல்லாததை ராணா கோடிக்காட்டினார். கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாததால், கடும் நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார்.
“மனுதான் நட்சத்திரம், நான் ஒரு வேலையில்லா பயிற்சியாளர், நான் யாரும் இல்லை. மனு என்னிடம் உதவி கேட்டதால் நான் என் வேலையை மட்டும் செய்தேன். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கம் அல்லது வேறெந்த அமைப்புகளிடமிருந்தும் எனக்கு மாதச் சம்பளம் இல்லை என்பது மக்களுக்குத் தெரியுமா?
“மனுவின் ஆற்றலை மட்டும் நான் மெருகூட்டினேன். நான் இந்தியாவுக்குத் திரும்பியவுடன் புதிதாக ஒரு வேலையைத் தேட வேண்டும்,” என்றார் ராணா.