திருமண வலையில் சிக்கவைத்து 20 பெண்களின் நகை, பணத்தைச் சூறையாடிய ஆடவர் கைது.

திருமணம் செய்துகொள்வதாகப் பெண்கள் பலருக்கு ஆசை காட்டி, அவர்களின் உடைமைகளைப் பறித்த ஆடவரை மகாராஷ்டிராவின் பல்கார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஃபிரோஸ் நியாஸி ஷேக் என்ற அந்த ஆடவர், 20க்கும் அதிகமான பெண்களின் பணத்தையும் நகைகளையும் சூறையாடியதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்டவரது சதி அம்பலமானது.
இணையத்தில் போலி பெயர்களில் வலம்வந்து கணவரை இழந்த பெண்களை அதிகம் ஷேக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
பெண்களிடமிருந்து பேரளவிலான பணத்தைப் பறித்த பிறகு, ஷேக் தலைமறைவாவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
ஷேக்கின் ஏமாற்று உத்தியையே காவல்துறையினரும் பின்பற்றி ஷேக்கைப் பிடித்தனர்.
போலி அடையாளத்தில் ஒரு பெண்ணாக ஷேக்குடன் உரையாடிய பிறகு அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, காவல்துறையினர் ஷேக்கைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஷேக்கிடமிருந்து ரூ. 3 லட்சம் பணத்தை அதிகாரிகள் மீட்டனர். பெண்களின் வங்கி அட்டைகள், காசோலைப் புத்தகங்கள், கைப்பேசிகள், மடிகணினிகள், நகைகள் ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றினர்.
ஆடவர் மீதான விசாரணை தொடர்கிறது.