மகாராஷ்டிரா காட்டுக்குள் கட்டி வைக்கப்பட்ட பெண்; தமிழ்நாட்டுக் கணவர் தேடப்படுகிறார்.
மகாராஷ்டிர மாநிலக் காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டுக்காரரின் மனைவியாக இருக்கலாம் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை அதிகப்படுத்தி உள்ளது.
அந்த மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலைக் காட்டில் இருந்து பெண்ணை மீட்டதாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜூலை 29) கூறியது.
அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்தப் பெண் பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்ததாகவும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மும்பையில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோனுர்லி கிராமத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) மாலை நேரம் ஆடு மேய்ப்பவர் ஒருவர் பெண்ணின் அழுகுரலைக் கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி ஓடினார்.
பெண் ஒருவர் சங்கிலியால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டதைக் கண்டதும் பதறிப்போய் அதுகுறித்து காவல்துறையிடம் அவர் தெரிவித்தார்.
“பல நாள் சாப்பிடாமல் வாடிப்போய் இருந்த பெண்ணை மீட்டு கொங்கன் வட்டாரத்தில் உள்ள சாவந்தவாடி மருத்துவமனையில் சேர்த்தோம்.
“தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆபத்தான கட்டத்தை அந்தப் பெண் தாண்டிவிட்டார். அவரது மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருந்துச் சீட்டு ஒன்று அவரிடம் இருந்தது.
“தமிழ்நாடு முகவரி உள்ள ஆதார் அட்டையும் அமெரிக்கக் கடப்பிதழின் நகலும் அவரிடம் இருந்தன. அதில் அவரது பெயர் லலிதா காயி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அவருக்கான விசா காலாவதியாகி விட்டது.
“அவரது உண்மையான அடையாளத்தை அறிய இந்த ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம்.
“முதலில் கிடைத்த தகவல்படி அந்தப் பெண் இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு மேல் தங்கி இருப்பது தெரிய வந்தது.
“பலத்த மழை பெய்த காட்டுக்குள் சாப்பிடாமல் இருந்த அவரால் பேச இயலவில்லை. அவர் எத்தனை நாள்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தார் என்று தெரியவில்லை.
“தமிழ்நாட்டைச் சேர்ந்த கணவர் அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்துவிட்டு ஓடிவிட்டதாகக் கருதுகிறோம்,” என்று செய்தியாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விளக்கினர்.
பெண்ணின் கணவரைத் தேடி கோவாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தனிப்படையினர் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர்.
உணவு, தண்ணீர் இல்லாமல் காட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பெண் எழுதிக் காண்பித்ததாகவும் அவர்கள் கூறினர். அவர் எதற்காக அந்தப் பெண்ணைக் கட்டிப்போட்டார்? நடந்தது என்ன? என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.