டிக்டாக்கின் தலைமை நிறுவனத்தில் நச்சுணவுச் சம்பவம்; 41 பேர் மருத்துவமனையில்.

ஒன் ராஃபிள்ஸ் கீயில் உள்ள டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட் டான்சில் (ByteDance) செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) பேரளவில் நச்சுணவுச் சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 41 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஒன் ராஃபிள்ஸ் கீயில் மருத்துவ உதவி கோரி பிற்பகல் 3.15 மணியளவில் தனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நிகழ்விடத்துக்கு மொத்தம் 17 அவசர மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களிடம் வயிற்றுவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது. அவர்கள் முன்னதாக ஒரே தரப்பிலிருந்து உணவருந்தியதாகக் கூறிய அது, இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாகச் சொன்னது.
ஒன் ராஃபிள்ஸ் கீயில் முதலுதவி புரிவதற்கான இடத்தை அமைத்துள்ள குடிமைத் தற்காப்புப் படை, ஒரே மாதிரியான அறிகுறிகள் உடைய மேலும் அதிகமானோரிடம் உடல்நலத்தைச் சோதித்து வருவதாகக் கூறியது.
மாலை 6.45 மணிவாக்கில் அப்பகுதியில் குறைந்தது 30 குடிமைத் தற்காப்புப் படையினர் காணப்பட்டனர். அங்கு இரு தீயணைப்பு வாகனங்கள், ஒரு அவசர மருத்துவ வாகனம் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒன் ராஃபிள்ஸ் கீ கட்டடத்தின் சவுத் டவர் வளாகத்தில் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள், பலருக்கு சிகிச்சை அளித்தனர்.