கேரள நிலச்சரிவு: பலி 153-ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153-ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.
இதுவரை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
கேரளம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பாறைகள் மற்றும் மண்ணுடன் கலந்துவந்த காட்டாற்று வெள்ளம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை ஆகிய கிராமங்களைச் சூழ்ந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதைந்தனா்.
நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தால், பசுமை நிறைந்த இந்தக் கிராமங்கள் புதைநிலம் போல் மாறின.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் 300 வீரா்கள், கடற்படை குழுவினா், தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. விமானப் படை ஹெலிகாப்டா்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சகதியிலும் ஆறுகளிலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருவதாக, மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு உயிருடன் மீட்கப்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.