மூளையை உண்ணும் கொடிய அமீபா – கேரளாவில் அதிகரிக்கும் பாதிப்புகள்!!
Primary Amoebic Meningoencephalitis (PAM) என்பது நெக்லேரியா ஃபோலேரி அமீபாவால்(Naegleria fowleri amoeba) ஏற்படும் அரிதான, மிகவும் ஆபத்தான நோயாகும். இது பெரும்பாலும் “மூளையை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படுகிறது.
இந்த நுண்ணிய உயிரினம் மூளையை ஆக்கிரமித்து, கடுமையான மற்றும் அடிக்கடி ஆபத்தான நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த அஃப்னான் ஜாசிம்(Afnan Jasim) என்ற 14 வயது சிறுவன் சமீபத்தில் இந்த நோயில் இருந்து மீண்டுள்ளது மீண்டும் இது குறித்தான பேச்சுக்களை அதிகரிக்க செய்துள்ளது.
ஏனென்றால், உலகம் முழுவதிலும் இதுவரையில் இந்நோயினால் பாதிப்படைந்து உயிர்பிழைத்த 11 பேரில் அவரும் ஒருவராக உள்ளார் என்ற காரணத்தினாலேயே.
பராமரிப்பு இல்லாத, சுத்தம் இல்லாத ஏரி, குளம், குட்டை, தேங்கியுள்ள நீர்நிலைகள் போன்றவற்றில் இந்த அமீபா உண்டாகி மனிதர்களை தாக்குகிறதாம். இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இந்த தொற்றினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஏழாவது நபராக பாதிக்கப்பட்டுள்ளார் இச்சிறுவன். இதற்கு முன்பாக சமீபத்திலேயே கோழிக்கோடை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர், கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன், மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் என 3 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
தற்போது திருச்சூரை சேர்ந்த 12 வயது சிறுவன் குணமடைந்திருக்கும் சூழலில் கண்ணூரைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.