வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் கண்முன்னே புதைந்ததை கண்டதாக உயிர்பிழைத்தவர் பேட்டி

வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் கண்முன்னே புதைந்ததை கண்டதாக உயிர்பிழைத்தவர் பேட்டி அளித்துள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, மேம்பாடி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதுவரை 153 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 200-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள், தங்களின் மோசமான அனுபவத்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளனர்.
முண்டக்கை கிராமத்தை சேர்ந்த பிரஞ்ஜிஷ் கூறுகையில்,
“நள்ளிரவு 12.40 மணியளவில் பயங்கர சப்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டது. எனது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். எங்கள் குடும்பத்தில் 8 பேர் உள்ளோம். எனது சித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர்” எனத் தெரிவித்தார்.
சூரல்மாலா கிராமத்தை சேர்ந்த பிரசன்னா கூறுகையில்,
“என்னால் எனது தந்தைக்கு மட்டுமே உதவ முடிந்தது. அவரை இழுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டேன். எனது தங்கைக்கு என்னால் உதவ முடியவில்லை. இரு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே ஓடி வந்தனர். ஆனால், அலறல் சப்தத்துடன் நிலச்சரிவில் அவர்கள் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கள் வீடும் அடித்துச் செல்லப்பட்டது” என்று அழுகுரலுடன் தெரிவித்துள்ளார்.
தனது மருமகளை இழந்த 80 வயது பத்மாவதி கூறுகையில், எனக்கென்று அவள் மட்டுமே இருந்தார். தற்போது என்னை யார் பார்த்துக் கொள்வார்கள். நான் அனாதையாகி விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தங்கள் கண்முன்னே குடும்பத்தினரையும், உறவினர்களையும் இழந்த குழந்தைகளும், ஊர் மக்களும் துக்கத்துடனும் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனும் முகாம்களில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.