டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி ரணிலுக்கு ஆதரவு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் அய்யாத்துரை சிறிரங்கேஸ்வரன் (31) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா முப்பது வருடங்களாக இந்த நாட்டில் அமைச்சராக தொடர்ச்சியாக கடமையாற்றியதற்கு காரணம் ஈ.பி.டி.பி கட்சி எப்போதும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடன் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா, “சமஷ்டி அரசின் சுதந்திரம்” என்ற அரசியல் குறிக்கோளுக்கு இணங்க, அரசியலின் ஊடாக அமைச்சராக மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும், தமிழ் மக்களும் அவர்களின் உரிமைகளுமே அவரது ஒரே ஆயுதமும் பலமும் எனவும் பேச்சாளர் வலியுறுத்தினார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையில் இருந்து பல வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஈபிடிபி கட்சிக்கு எந்தவொரு வேட்பாளரின் கைக்கூலியாகவோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஈ.பி.டி.பி போன்ற மிகச் சிறந்த கட்சி இருப்பதால், அவர்கள் வேறு கட்சியின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த ஊடகப் பேச்சாளர், ஈ.பி.டி.பி கட்சி எந்த சூழ்நிலையிலும் வேறுகட்சி அல்லது நபரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.