என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் – சவுக்கு சங்கர்
என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து, அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக சவுக்கு சங்கர் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். போலீசார் இன்று சவுக்கு சங்கரை நீலகிரியில் இருந்து ஆத்தூர் வழியாக வேன் மூலம் சென்னை புழல் சிறைக்கு அழைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தனர்.
நேற்று பகல் 12.30 மணியளவில் வேனில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சவுக்கு சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவரை அங்கிருந்து வேன் மூலம் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சவுக்கு சங்கர். அப்போது சவுக்கு சங்கர் வேனில் இருந்தபடியே,
செய்தியாளர்களைப் பார்த்து, “என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம், அவரது தூண்டுதலின் பேரில் தான் என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருகின்றனர்” என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.