ஊடகவியலாளர் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்.

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கைக் மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்ட முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுததாரிகள், நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் முன்னிலையில் சுட்டுப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.