மும்பை அணி 34 ரன்னில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி தலைவர் ரோகித் சர்மா, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
ஐ தராபாத் அணியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதில் சந்தீப் சர்மா சேர்க்கப்பட்டார்.
மும்பை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ரோகித் சர்மா (6) அடுத்த பந்தில் அவுட்டானார். சூர்ய குமார் 27 ரன்னுக்கு அவுட்டானார். குயின்டன் டி காக், 32வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 11வது அரைசதம். குயின்டன் 67 ரன்னில், ரஷித் சுழலில் சிக்கினார். இஷான் கிஷான் 31 ரன் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா (28) சற்று உதவினார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு பேர்ஸ்டோவ், வோர்னர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பேர்ஸ்டோவ் 25, மணிஷ் பாண்டே 30 ரன்கள் எடுத்தனர். வில்லியம்சன் (3), பிரியம் கார்க் (8) கைவிட்டனர். அரைசதம் அடித்த வோர்னர் (60), பட்டின்சன் ‘வேகத்தில்’ சரிய, மும்பை வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அப்துல் சமத் (20) ஆறுதல் தந்தார்.ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் மட்டும் எடுத்தது.