பெய்ருட் கட்டட இடிபாடுகளில் ஹிஸ்புல்லா தளபதியின் உடல்.
பெய்ருட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கட்டட இடிபாடுகளில் ஜூலை 31ஆம் தேதி ஹுஸ்புல்லாவின் மூத்த ராணுவ தளபதியான ஃபுவாட் ஷுக்கரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக இரண்டு லெபனானிய பாதுகாப்புத் தகவல்கள் தெரிவித்தன.
ஜுலை 31ஆம் முன்னதாக இஸ்ரேல் தாக்கிய கட்டடத்தில் ஷுக்கர் இருந்ததாக ஹிஸ்புல்லா கூறியிருந்தது. ஆனால் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி உடனடியாக உறுதிப்படுத்தப் படவில்லை.
இந்நிலையில் ஜூலை 30ஆம் தேதி ஷுக்கர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியிருந்தது. வாரயிறுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் மேட்டுப் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு இவர்தான் பொறுப்பு என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இந்தத் தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கூறியது.
இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சரான யோவ் காலண்ட், “ஷுக்கரின் கைகளில் பல இஸ்ரேலியர்களின் ரத்தம் படிந்துள்ளது, இன்று இரவு எங்களுடைய மக்களின் ரத்தத்துக்கு பதிலடி கொடுத்துள்ளோம்” என்றார்.
மற்றொரு நாட்டின் மூத்த பாதுகாப்பு வட்டாரம் ஒன்று, ஷுக்கர் காயமடைந்து இறந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது இரண்டு பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டதாக மருத்துவ, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட்ட ஹிஸ்புல்லாவின் அறிக்கை, பெய்ருட் தெற்கு புறநகர்ப் பகுதியில் அதன் வலுவான பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தை இஸ்ரேலிய ராணுவம் தாக்கியதாகத் தெரிவித்தது. இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குடிமக்கள் உயிரிழந்தனர், காயம் அடைந்தனர் என்றும் அறிக்கை தெரிவித்தது.
அந்தச் சமயத்தில் ஷுக்குர் கட்டடத்தில் இருந்தார். ஆனால் அவரது முடிவு குறித்து தெரியவில்லை.
ஷுக்கர், ஹிஸ்புல்லா தலைவரான சயத் ஹசன் நஸ்ரல்லாவுக்கு ஆலோசகராக இருந்தார் என்று ஹிஸ்புல்லாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.