இலங்கைப் படை தாக்கியதில் படகு மூழ்கி தமிழக மீனவர் உயிரிழப்பு; போராட்டம்.

இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகு மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை (ஜூலை 31) கடலுக்குச் சென்றனர்.

இரவில் அவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அந்த மீனவர்களைக் கைது செய்ய ரோந்துக் கப்பலில் துரத்தினர்.

அப்போது கார்த்திக்கேயன் என்பவரின் விசைப்படகில் ரோந்துக் கப்பல் கடுமையாக மோதியதில், அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதில் அவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் மாயமாகி உள்ளார்.

மேலும் இருவர் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் தாலுகா அலுவலம் எதிரே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்புமணி கண்டனம்
இந்நிலையில், மீனவர் உயிரிழந்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைக் கப்பல் மோதிய நிகழ்வை விபத்தாக பார்க்க முடியாது. அதை திட்டமிட்ட தாக்குதலாகவும் கொலையாகவும் தான் பார்க்க வேண்டும்.

“தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதித் தாக்கியுள்ளனர். இதை மத்திய, மாநில அரசுகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

“இதற்குக் காரணமான இலங்கைப் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்துத் தண்டிக்க வேண்டும்,” என்று தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலை கடிதம்
இச்சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதி இருப்பதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

“நமது மீனவர்களில் ஒருவரின் மரணம் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டது, உங்கள் தலையீட்டின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

“காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியுறவு அமைச்சகம் தலையிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்தக் கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.