பள்ளியில் 5 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு; 10 வயது சிறுவன் காயம்.
பீகாரின் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன்ஸ் தொடக்கப்பள்ளியில் 5 வயதுச் சிறுவன், 10 வயதுச் சிறுவனைச் சுட்டுள்ளான் என்று காவல்துறை தெரிவித்தது.
தோட்டா கையில் பட்டு காயமடைந்த 3ஆம் வகுப்பு மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.
⁹
அப்பள்ளியில் நர்சரி வகுப்பில் பயிலும் 5 வயதுச் சிறுவன், பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்றுள்ளான்.
“நான் வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து என்னைச் சுட வந்தான். அவனைத் தடுக்கப் போனபோது என் கையில் சுட்டான்,” என்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவன் காணொளியில் கூறியுள்ளான்.
தாக்கிய சிறுவனுடன் தனக்கு எந்தச் சண்டையும் இல்லை என்றும் அந்த மாணவன் கூறினான்.
காவல்துறையினர் பள்ளி முதல்வரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சுட்ட மாணவனையும் அவனது தந்தையும் தேடப்பட்டு வருகின்றனர்.
“கையில் காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷைஷவ் யாதவ் கூறினார்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பைகளை சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.