வயநாடு நிலச்சரிவு: மூன்று நாள்களுக்குப்பின் நால்வர் உயிருடன் மீட்பு
இந்தியாவின் கேரள மாநிலம், வயநாட்டைப் பேரழிவிற்கு உள்ளாக்கிய நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாள்களுக்குப்பின் நால்வர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) வயநாடு மாவட்டத்தை உலுக்கிய நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 330ஆக அதிகரித்துவிட்டது என்று கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியையும் அருகிலிருந்த சூரல்மலை நகரையும் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெருஞ்சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு கனரக இயந்திரங்களை எடுத்துச் செல்ல ஏதுவாக இந்திய ராணுவத்தினர் 58 மீட்டர் நீள இரும்புப் பாலம் ஒன்றை விரைந்து கட்டி முடித்தனர். இதனையடுத்து, மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், ஊரகப் பகுதி ஒன்றில் ஆண்கள் இருவரும் பெண்கள் இருவரும் வெள்ளிக்கிழமையன்று உயிருடன் மீட்கப்பட்டதாக வி.டி. மேத்யூ என்ற ராணுவத் தளபதி கூறினார்.
“அவர்கள் புதைந்திருக்கவில்லை, கிராமப்புறத்தில் இருந்தனர். அவர்களில் ஒருவர் காயமடைந்திருந்தார்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் திரு மேத்யூ சொன்னார்.
கடந்த இரு நாள்களில் மலைப்பகுதியிலுள்ள சிற்றூர்கள், தேயிலை, ஏலக்காய் தோட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 1,600 பேர் மீட்கப்பட்டதாகவும் ஏறக்குறைய 350 கட்டடங்கள் சேதமுற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.