ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்: அரையிறுதிக்கு முன்னேறத் தவறிய சாந்தி பெரேரா.
சிங்கப்பூரின் திடல்தட நட்சத்திரம் சாந்தி பெரேரா, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீட்டர் ஓட்டத்தில் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடந்த ஏழாவது தகுதிச் சுற்றில் இடம்பெற்ற அவர், 11.63 வினாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து, ஏழாவதாக வந்தார்.
ஒட்டுமொத்தமாக, 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்ட 72 பேரில் சாந்தி 55ஆம் நிலையைப் பிடித்தார்.
ஐவரி கோஸ்ட்டின் மேரி ஜோசி டா லோ ஸ்மித் 10.87 வினாடிகளுடன் தகுதிச் சுற்றில் முதலாமிடத்தைப் பிடித்தார். 2008, 2012 ஒலிம்பிக் வெற்றியாளரான ஜமைக்காவின் ஷெல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ் (10.92 வினாடி) இரண்டாமிடத்தையும் பிரிட்டனின் டேரல் நேட்டா (10.92 வினாடி) மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
ஒவ்வொரு தகுதிச் சுற்றிலும் முதல் மூன்று நிலைகளைப் பிடிப்பவர்களும் அதிவேகமாகப் பந்தயத்தை முடித்த அடுத்த மூன்று பேரும் சனிக்கிழமை நடைபெறும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர்.
சாந்தி 100 மீட்டர் தொலைவை 11.20 வினாடிகளில் ஓடிக் கடந்ததே சிங்கப்பூரின் தேசிய சாதனை.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாந்தி, உலகத் தரவரிசையில் முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக் 100 மீட்டர் பந்தயத்திற்குத் தகுதி பெற்றார்.
ஆசிய வெற்றியாளரான 27 வயது சாந்தி, அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) இடம்பெறும் 200 மீட்டர் தகுதிச்சுற்றில் போட்டியிடுவார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்திலும் சாந்தி பங்குபெற்றிருந்தார்.
அப்போது அவர் 23.96 வினாடிகளில் ஓடி முடித்து, தம்முடைய தகுதிச் சுற்றில் ஆறாமிடத்தையும் ஒட்டுமொத்தமாக 41 பேரில் 39ஆம் இடத்தையும் பிடித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடந்த சில மாதங்களாக ஐரோப்பாவில் தங்கியபடி சாந்தி பயிற்சி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.