பொருளாதாரம் போலவே அரசியல் முறையும் கடனால் வீழ்ந்தது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்ற கடன் வாங்கியதால் நாட்டின் பொருளாதாரமும் அரசியல் முறையும் வீழ்ந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (02) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதைக் கூறினார்.

மீண்டும் அந்தத் தவறு நடக்க இடமளிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறை மூலம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிப்பு செய்வது நாட்டின் கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைவரின் பொறுப்பு என்று விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நாட்டின் இன பிரச்சினையையும் விரைவில் தீர்க்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, பெரும்பான்மையான சிங்கள மற்றும் பௌத்த மக்களுக்கு முன்னுரிமை இடம் இருந்தாலும், அனைவரையும் சமமாக நடத்துவது மிகவும் முக்கியம் என்றும், இன மற்றும் மத குழுக்களுக்கு இடையிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலும் சமத்துவத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

“நாம் நமது அரசியல் முறை பற்றி மீண்டும் சிந்தித்து கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். சிறந்த எதிர்காலத்திற்கு நாட்டிற்கு புதிய அரசியல் முறை தேவை. இது அரசியலமைப்பு அல்லது தலைமைத்துவம் என்ற விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை, பொறுப்பேற்கக்கூடிய தைரியமான தலைவர்கள் இருப்பதும் மிக அவசியம்.

அதேபோல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சிங்கள மற்றும் தமிழ் இனப் பிரச்சினைகளையும் நாம் விரைவில் தீர்க்க வேண்டியுள்ளது.

பெரும்பான்மையான சிங்கள மற்றும் பௌத்த மக்களுக்கு முன்னுரிமை இடம் இருந்தாலும், அனைவரையும் சமமாக நடத்துவது மிகவும் முக்கியம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இன மற்றும் மத குழுக்களுக்கு இடையிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலும் சமத்துவத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

அதேபோல், நாம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ஒரே மாதிரியாக வளர்ச்சியடையச் செய்ய வேண்டும்.

நான் அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது, ஆனால் பின்னர் அது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்போது போர் முடிந்துவிட்டது. எனவே யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாணத்தை மேம்படுத்த நேரம் வந்துள்ளது. வறுமை ஒழிப்பு, விவசாய நவீனமயமாக்கல் போன்ற பிராந்திய மேம்பாட்டிற்காக நாம் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.